ஊடக வெளியீடு
18 ஜூலை 2024
இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் போருக்குப் பின்னரான வடபகுதியில் அதன் தாக்கமும்
யுக்தி கூட்டிணைவினால் 2024 ஜூலை 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட முன்னெடுப்பு ஒன்றில் சமூகத் தலைவர்கள், ஆய்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், கூட்டுறவாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்தனர். “இலங்கையின் பொருளாதார நெருக்கடியும், வடபகுதியில் அதன் தாக்கமும்” என்னும் தலைப்பிலான இந்த நிகழ்வு, இலங்கையின் உழைக்கும் மக்களின் இயக்கங்களுக்கும் சனநாயகம் மற்றும் நீதிக்கான போராட்டங்களுக்கும் ஆதரவு வழங்கும் பன்முக மன்றமாக யுக்தியைப் பங்குபற்றுநர்களுக்கு அறிமுகம் செய்தது. இந்த நிகழ்வின் கலந்துரையாடலில், இலங்கையின் வடபகுதியில் உள்ள பல்வகை சமூகங்களின் பல்வேறுப்பட்ட போராட்டங்கள் மற்றும் சவால்களையும், அரசின் நவதாராளவாதக் கொள்கைகளுடான பேரினவாத நிகழ்ச்சி நிரல் என்பன பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை எவ்வாறு மேலும் மோசமடையச் செய்துள்ளது என்பதையும் புரிந்து கொள்ள நாடியது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலாநிதி அகிலன் கதிர்காமர், கடன் நெருக்கடி மற்றும் உழைக்கும் மக்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் அரசின் நவதாராளவாதக் கொள்கைகள் என்பவற்றை ஆராய்ந்ததுடன் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயன்முறை எவ்வாறு தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதிகளைப் பறிக்கின்றது என்பதையும் எடுத்துக்காட்டினார். இந்த உரையைத் தொடர்ந்து, சமூகத் தலைவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோர், போருக்குப்பின்னரான இலங்கையின் வடபகுதியில் தற்போது நிலவும் பிரச்சினைகள் பற்றியும் ஏற்கனவே கடினமாகவுள்ள அவர்களது வாழ்க்கை நிலைமைகள் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியினால் எவ்வாறு மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றன என்பது பற்றியும் விளக்கமளித்தனர். ஊர்காவற்றுறையைச் சேர்ந்த கடற்றொழில் தலைவர்களில் ஒருவரான திரு அன்னலிங்கம் அண்ணராசா, சிறு-கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் மக்களின் உணவுப் பாதுகாப்பையும் சீர்குலைக்கும் அரசின் கடலுணவு ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட வர்த்தகமயமாக்களுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் வட கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளாக தன்னிறைவிற்கு வழிவகுக்கும் உள்ளுர் கடலுணவு உற்பத்திக்கு அரசின் ஆதரவு, எரிபொருள் மானியத்தை மீளவும் அறிமுகம் செய்தல், சட்டவிரோத மீன்பிடிச் செயற்பாடுகளுக்குத் தடைவிதிக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்தல் அத்துடன் வடக்கின் கடற்பரப்பினுள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்பவற்றை அவர் முன்வைத்தார்.
இளம் ஆய்வாளர்களின் வலையமைப்பைச் (YRN) சேர்ந்த செல்வி சுகன்யா காண்டீபன், பொருளாதார நெருக்கடியின் பின்னர் குடும்பங்கள் அவற்றின் சொந்த நுகர்வுத் தேவைகளுக்காகப் தனிப்பட்ட கடன் பொறியில் சிக்கியுள்ளது போன்ற குடும்ப மட்டங்களிலான இடர்நிலையை எடுத்துக்காட்டினார். அவரைத் தொடர்ந்து, முல்லைத்தீவைச் சேர்ந்த இளம் ஆய்வாளர்களின் வலையமைப்பின் திரு. தனபாலசிங்கம் துளசிராம், பிராந்தியத்திலுள்ள சிறு-விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களைத் தண்டிக்கும் வகையில் விவசாய கம்பனிகள் மற்றும் விவசாய வர்த்தகமயாக்கலுக்கு சார்பான கொள்கைகளை அரசாங்கம் மேம்படுத்தும் சூழமைவில், தன்னிறைவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இராணுவத்தினாலும் வனத் திணைக்களத்தினாலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அல்லது வேலிகளிடப்பட்டுள்ள நிலையில், முசலிப் பிரதேசத்தில் காணிகளுக்கான அணுகல் தொடர்பில் தமக்குள்ள பிரச்சினைகள் மற்றும் அதனால் தமது வாழ்வாதார நடவடிக்கைகள் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து மன்னாரைச் சேர்ந்த சமூகத் தலைவர்களில் ஒருவரான திருமதி. மொஹமட் ஆமீர் அமீருன் நிசா குறிப்பிட்டார். மேலும், முன்பள்ளி ஒருங்கிணைப்பாளர் என்னும் வகையில், வடமாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள், இன்றுவரை மாகாணசபையிலிருந்து 6,000 ரூபாவை மாத்திரமே சம்பளமாகப் பெறுகின்றனர் என்பதுடன் மாகாணசபை அவர்களது போராட்டங்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றது எனவும் எடுத்துக்காட்டினார். காணி உரிமை குறித்துப் பேசுகையில், பிராந்தியத்தில் அரசு, மற்றும் ஆதிக்கம் செலுத்தும் சாதி, வர்க்கம் மற்றும் இனக்குழுக்கள் போன்ற பலதரப்பட்ட தரப்பினரால் பல்வேறு சமூகங்களுக்கு காணிக்கான உரிமை எவ்வாறு நிராகரிக்கப்படுகின்றது என இளம் ஆய்வாளர்களின் வலையமைப்பைச் சேர்ந்த செல்வி யதுர்சா உலகேந்திரன் எடுத்துரைத்தார். நெருக்கடிச் சூழமைவில், குடும்ப மட்டத்திலான போசாக்கு நிலைகளைப் பாதுகாப்பதற்காக உணவு உற்பத்தியை இயலச்செய்யும் பொருட்டு காணியற்ற சமூகங்களுக்கு காணிகளை மீள்விநியோகம் செய்ய வேண்டியதன் பொருத்தம் மற்றும் அவசரநிலையை அவர் வலியுறுத்தினார். இறுதியாக, கிளிநொச்சி, பூநகரியைச் சேர்ந்த மீனவத் தலைவரான திரு பிரான்சிஸ், அரசியல்வாதிகளாலும் கொள்கை உருவாக்குநர்களாலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் மீனவ சமூகத்தின் போராட்டங்களையும், தமது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்காக மீன் புரதத்தில் தங்கியிருக்கும் இலங்கை மக்களுக்கு ஏற்படுத்தப்படும் விளைவுகளையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
நிகழ்வின்போது இடம்பெற்ற கலந்துரையாடலில், வேலைவாய்ப்பின்மை குறித்த அச்சம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஒன்றின்போது அவர்களது குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளுக்கு ஆதரவாக அமையக்கூடியதான அவர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும் பொதுத் துறையில் அரச முதலீடு இன்மை ஆகிய விடயங்களைப் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் எடுத்துரைத்தனர். 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இடம்பெறவுள்ள தேர்தல்களின் பின்னர் உருவாகும் அரசாங்கம், உழைக்கும் மக்களின் நிலைக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் முன்னுரிமை வழங்கவேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
உழைக்கும் மக்களின் மீதான தேசியக் கடன் நெருக்கடியின் தாக்கத்தைப் புரிந்துகொள்வதை நோக்கியதாக யுக்தி கூட்டிணைவு செயற்பட்டு வருகின்றது. இந்த நிகழ்வு பொருளாதார நெருக்கடி மற்றும் அதற்காக முன்மொழியப்பட்டுள்ள “தீர்வுகள்” ஆகியவற்றின் விளைவுகளை மக்களே சுமக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதையும் இவ்வாறான அரசின் வங்குரோத்து நிலை, கடன் தவணை தவறுகை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான அரசிறை நடவடிக்கைகள் ஆகியவற்றிற்குக் காரணமானோர் இவற்றை சுமக்கவில்லை என்பதையும் இந்நிகழ்வு முன்னிறுத்தியது.
மேலதிக தகவல்களுக்கு
சகுன எம் கமகே
ஆய்வாளர் மற்றும் ஊடக முகாமையாளர்
Leave a comment